ஐயப்பன் சிலையை தொட்டதாக நாடகம்-ஜெயமாலா ஆஜராக கேரள கோர்ட் உத்தரவு


திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்ப சாமி சிலையை தொட்டதாக கூறி நாடகமாடிய விவகாரத்தில் கன்னட நடிகை ஜெயமாலா உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2006ம ஆண்டு பிரபல ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவபிரச்சன்னம் நடந்தது. அப்போது ஐயப்பன் விக்ரத்தை ஒரு பெண் தொட்டு விட்டதால் பரிகார பூஜை செய்ய வேண்டுமென பணிக்கர் கூறினார்.

இதற்கு மறுநாளே கன்னட நடிகை ஜெயமாலா நான்தான் பல ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் விக்ரத்தை தெரியாமல் தொட்டு விட்டேன் என்று கூறினார்.

சபரி்மலைக்கு செல்ல 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐயப்ப விக்கிரத்தை ஜெயமாலா தொட்டதாக கூறியது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் பணிக்கரும், ஜெயமாலாவும் சேர்ந்து திட்டமிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

இதையடுத்து பணிக்கர், அவரது உதவியாளர் ரகுபதி, ஜெயமாலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் 3 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

3 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டுமென ஜெயமாலா கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இது தொடர்பாக ராணி நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் ராணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகை ஜெயமாலா, உன்னி கிருஷ்ண பணிக்கர், ரகுபதி ஆகியோர் இம்மாத இறுதிக்குள் நேரில் ஆஜாராக நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 

Label

Label

Labels