“சினிமா தொழிலாளர்களுக்கும், பட அதிபர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதால், இனிமேல் படப்பிடிப்பை நிறுத்த மாட்டோம்” என்று ‘பெப்சி’ செயலாளர் சிவா கூறினார்.
சம்பள உயர்வு
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (பெப்சி), 23 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள்தான் சினிமா படப்பிடிப்புகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சமீபத்தில் பொதுக்குழுவை கூட்டி, சம்பள உயர்வு கோரி தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இதுதொடர்பாக பட அதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில், இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
பொன்மாலைப் பொழுது விவகாரம்
இந்த நிலையில், திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டதால், பெங்களூரில் நடந்த ‘பொன்மாலைப்பொழுது’ என்ற படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த படத்தின் நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்டார்கள்.
இந்த சம்பவம், பட அதிபர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக, ‘பெப்சி’யின் செயலாளர் ஜி.சிவா கூறுகையில், “பெங்களூரில் நடந்தது பழைய சம்பவம். அது முடிந்து போன ஒன்று. எங்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்கள், சம்பள உயர்வு கொடுப்பதாக எழுதிக்கொடுங்கள் என்றுதான் கேட்டு இருக்கிறார்கள். அப்படி அந்த பட அதிபர் எழுதிக் கொடுக்காததால், படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இனிமேல், எந்த படப்பிடிப்பையும் நிறுத்த மாட்டோம். தொழிலாளர்களுக்கும், பட அதிபர்களுக்கும் இடையே வருகிற 20-ந் தேதி வரை பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 21-ந் தேதி, புதிய சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுவிடும். சம்பளத்தை உயர்த்தி தருவதாக பட அதிபர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்,” என்றார்.