தயாரிப்பாளர் சங்க தேர்தல்: முற்றுகிறது மோதல்!


சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவதில் தாமதம் தொடர்வதால், தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக எதிர் கோஷ்டியினர் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு குழு திஹ்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் முறையற்ற நடவடிக்கைகளால் தயாரிப்பாளர்களின் நலன் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தலைவர் ராம.நாராயணன், செயலாளர் சிவசக்தி பாண்டியன் மற்றும் சில செயற்குழு உறுப்பினர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்தார்கள். ஒரு சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ராஜினாமா செய்துவிட்ட பிறகு அந்த அமைப்பு அதிகாரம் இழந்த அமைப்பாகி விடுகிறது.

உடனடி தேர்தல்

எனவே உடனடியாக சங்கத்துக்கு தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று 300-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றினோம்.

அதைத்தொடர்ந்து ஜுலை 3-ந் தேதி பொதுக்குழுவை கூட்டுவது என்றும், அதில் தேர்தல் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்தார். ஆனால், இன்றுவரை பொதுக்குழு நடத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை புதுப்பிக்க காலதாமதமானதால் ‘பெப்சி’ அமைப்பினர் பொதுக் குழுவை கூட்டி, புதிய ஊதியத்தை அவர்களாகவே நிர்ணயித்துக்கொண்டார்கள். இதைக்கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் உடனடியாக தயாரிப்பாளர்கள் பாதுகாப்புக் குழுவினருடன் கலந்து பேசி, எங்களையும் இணைத்துக்கொண்டு பெப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து குழப்பமே நிலவியது.

பெப்சியின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கானது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை அவசர கோலத்தில் முடிவு செய்ய முடியாது என்று தெரிந்தும், உள்நோக்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடர்வது நாடகம்தான்.

எனவே தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை உடனடியாக நடத்தி, புதிய நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். ஆகவே கண்துடைப்புக்காக நடத்தப்படும் இந்த பேச்சுவார்த்தையில், இனி நாங்கள் பங்கேற்கப்போவதில்லை.

தொடர் போராட்டம் நடத்துவோம்

ஏற்கனவே செயற்குழுவில் அறிவித்தபடி, ஜுலை 3-ந் தேதி பொதுக்குழுவை கூட்டி, தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு குழு சார்பில் ஜுலை 4-ந் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரஸ் மீட்…

இந்த அறிக்கையை பத்திரிகையாளர்களுக்கு விளக்கி எதிர் கோஷ்டியினர் நேற்று பேட்டியளித்தனர்.

இதில் பட அதிபர்கள் கேயார், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், பி.எல்.தேனப்பன், ஞானவேல், பட்டியல் சேகர், சோழா பொன்னுரங்கம், பாஸ்கர், ரகு, ஹென்றி, பாபுகணேஷ், நடிகர் கருணாஸ் ஆகியோர் பேசினார்கள்.

 
 
 

Label

Label

Labels