காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!


ஷாங்காய் நகரில் திரையிடப்பட்ட காவலன் படத்தைப் பார்த்து சீன ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இது எனக்கு வியப்பைத் தந்தது என நடிகர் விஜய் கூறினார்.

ஷாங்காய் திரைப்பட விழா சீனாவில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய் நடித்த காவலன் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. ஆங்கில - சீன மொழி சப்-டைட்டிலுடன் காவலன் திரையிடப்பட்டது.

சீன மொழியைச் சார்ந்த அனைவரும் ஆர்வத்துடன் படம் பார்த்தனர். ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததுடன் காமெடி காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை தந்தது என்று கூறினார் விஜய்.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கினர். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடிந்ததும் அவர்கள் மத்தியில் விஜய் பேசினார்.

அவர் கூறுகையில், "வெளிநாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது முற்றிலும் எனக்கு புது அனுபவம்.

நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது உதாரணம். படம் பார்த்து முடித்தவுடன் என் கேரக்டரான பூமி என்ற பெயரைச் சொல்லி அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்நாளில் இது மறக்க முடியாத அனுபவம்.

ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். (பலத்த கைதட்டல்) நான் படிக்கும் போது அவருடைய படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்," என்றார்.

விஜய்யின் பேச்சு அனைவரையும் கவரவே, எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக விஜய் நினைவு பரிசை வழங்கினார்.

 
 
 

Label

Label

Labels