இயக்குநர் சங்கத்தின் நன்மை கருதியும், சங்கத்தில் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருதியும், இருபிரிவாக போட்டியிட்ட பாரதிராஜா – அமீர் தலைமையிலான அணிகள் சமாதான உடன்பாட்டுக்கு வந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதன் படி இப்போது இருவரும் ஒரே அணியில் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு தற்போதைய பதவியில் இருக்கும் பாரதிராஜவே போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு அமீரும், பொருளாளர் பதவிக்கு ஜனநாதனும், பிற பதவிகளுக்கு மற்ற இயக்குநர்களும் போட்டியிடுகின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 40 ஆண்டுகளாக எங்களது இயக்குநர் சங்கத்தில் எந்தவித கருத்து வேறுபாடுகளும், பிளவுகளும் ஏற்படாததை மனதில் கொண்டு, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகிய இருவரின் முயற்சியால் இரு அணிகளை சேர்ந்தவர்களையும் சந்திக்க வைத்து, எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஓர் அணியில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறோம். அதன்படி தற்போதைய தலைவர் பாரதிராஜாவே மீண்டும் தலைவர் பதவிக்கும், அமீரை செயலாளர் பதவிக்கும், ஜனநாதனை பொருளாளர் பதவிக்கும் போட்டியிட வைக்கிறோம்.
இதன்மூலம் எங்களுக்குள் இருந்த வேறுபாடுகள் கலைந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு சங்கத்தினை வளர்க்க பாடுபடுவோம். இயக்குநர்கள் ஒற்றுமையாக செல்பட இந்த முயற்சி எடுத்த கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
இதேபோல இயக்குநர் அமீரும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சங்கத்தின் நன்மை கருதியும், திரையுலகில் இயுக்குநர்களின் ஒற்றுமையை உணர்த்தும் கடமை வேண்டி, இரு பிரிவாக இருந்த நாங்கள் இப்போது அதனை மறந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம். இயக்குநர்களின் ஒற்றுமைக்கு பாலமாக இருந்து செயல்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு ஆகியோருக்கு நன்றிகள்,” என்று கூறியுள்ளார்.