குட்டி பத்மினியின் மோசடி வழக்கு: ரம்யா கிருஷ்ணனுக்கு நோட்டீஸ்!


சென்னை: நடிகை குட்டி பத்மினி தொடர்ந்த மோசடி வழக்கில், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரிக்கு வாரண்டு பிறப்பித்து எழும்பூர் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் 14-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வைஷ்ணவீஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் நடிகை குட்டி பத்மினி தாக்கல் செய்த வழக்கில், “நான் 2008-ம் ஆண்டு `கலசம்’ என்ற பெயரில் கதை எழுதினேன். இந்த கதைக்குள்ள முழு காப்பீட்டு உரிமை எனக்கு உள்ளது. காப்பீட்டு உரிமைக்காக 2008-ம் ஆண்டு டிசம்பரில் நான் விண்ணப்பித்தேன். கலசம் தலைப்பில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட கதைக்கும் நான் காப்பீட்டு உரிமை கேட்டு விண்ணப்பித்தேன்.

இந்த நிலையில் கலசம் என்ற தலைப்பில் தயாரிக்கப்படும் டி.வி. தொடரில், நான் எழுத்தாக்கப் பிரிவில் தலைமை வகித்து, அதற்கான சம்பளத்தை நான் பெறுவது தொடர்பாக, ஆர்.டி.வி.ஸ்டார்லைட் ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரியும் பங்குதாரருமான வினயா கிருஷ்ணன் மற்றும் எனக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் ரம்யா கிருஷ்ணனும் வினயா கிருஷ்ணனும் அந்த ஒப்பந்தத்தை சரிவர பின்பற்றவில்லை. இதனால் அவர்களுக்கு நான் நோட்டீஸ் அனுப்பினேன். இதனால் ஒப்பந்தத்தில் இருந்து நான் நீக்கப்பட்டேன். இந்த விவகாரம் பற்றி உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்தேன். இந்த விஷயத்தில் தென்இந்திய டி.வி. தொடர் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டதன் விளைவாக 2009-ம் ஆண்டு பிப்ரவரியில் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டோம்.

நம்பிக்கை மோசடி

புதிய ஒப்பந்தம் ஏற்பட்டதை அடுத்து, அவர்களின் மேல் நம்பிக்கை வைத்து உயர்நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒப்பந்தத்துக்கு முரணாக அவர்கள் செயல்பட்டு, தெலுங்கு மொழியில் கலசம் டி.வி. தொடரை ஒளிபரப்பினர். அதில் எனது பெயரை டைட்டிலில் போடவில்லை. சம்பளமும் தரவில்லை. இதனால் எனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. வேண்டுமென்றே அவர்கள் இந்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர்.

இது என்னை ஏமாற்றும் நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் இவர்கள் காப்பீட்டு உரிமைச் சட்டப் பிரிவு 63 மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 406 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றுதல்) ரம்யா கிருஷ்ணன் மற்றும் வினயா கிருஷ்ணனை தண்டிக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆஜராகாத ரம்யா கிருஷ்ணன்

இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு கீதாராணி விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணைக்கு ரம்யா கிருஷ்ணன் மற்றும் வினயா கிருஷ்ணன் ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக கடந்த 9-ந் தேதி மாஜிஸ்திரேட்டு வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்த வாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று 2 பேரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

 
 
 

Label

Label

Labels